திருச்சி: 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் பக்தர்களால் அழைக்கப்படும் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில், விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் இவ்விழா தொடங்கியது. பின்னர் கற்பக விருட்சகம், யாளி, கருட, ஹனுமந்த, யானை ஆகிய வாகனங்களில் நம்பெருமாள் வீதியுலா வந்தார். இதனைத் தொடர்ந்து ஏழாம் திருநாளான இந்த மாதம் 24 ஆம் தேதி நம்பெருமாள் திருச்சிவிகை வாகனத்தில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார். அதன் பின்னர் சித்திரை வீதிகளில் வலம் வந்த அவர் தயார் சன்னதி சென்றடைந்தார். அங்கு திருமஞ்சம் கண்டருளிய அவர் மீண்டும் மூலஸ்தானம் வந்தடைந்தார். எட்டாம் திருநாளான நேற்று அவர் தங்கக்குதிரை வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.ஒன்பதாம் திருநாளான இன்று அதிகாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலிலிருந்து சீர் வரிசையாக வந்த கிளி மாலையை அணிந்த படி மூல ஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் மேஷ-லக்கனப்படி அதிகாலை 5.15 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். காலை 6 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா கோஷத்துடன் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்தனர். அத்திருத்தேர் நான்கு முக்கிய வீதிகளையும் சுற்றி வலம் வந்தது. மேலும், ரெங்கா ரெங்கா என்று தரிசித்த பக்தர்களுக்கு திருத்தேரில் எழுந்தருளிய பெருமாள் அருள் பாலித்தார். இதனை முன்னிட்டு பலத்த போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவிற்காக ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Category
🗞
NewsTranscript
00:00Oh